மும்பையில் இன்று ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் கோலாகல தொடக்கம்


மும்பையில் இன்று ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் கோலாகல தொடக்கம்


மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகிறது. இந்தியாவின் முக்கிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 15வது தொடர் பல புதிய சிறப்பம்சங்களுடன் இன்று தொடங்குகிறது. இந்தமுறை  லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. மெகா ஏலத்துக்குப் பிறகு அனைத்து அணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள், அறிமுக இளம் வீரர்கள் என பலரும் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

மும்பை, ராஜஸ்தான், டெல்லியை தவிர மற்ற அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் போட்டிகளைக் காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. மார்ச் 31க்கு பிறகு கொரோனா கட்டுபாடுகள் முடிவுக்கு வர உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாடுவதில் மாற்றமில்லை. முன்பு 55 லீக் ஆட்டங்கள் நடந்தன. இந்த முறை அது 70ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 65 நாட்களில் 70 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் நடக்க உள்ளன.

எல்லா ஆட்டங்களும்  மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டிஒய் பாட்டீல் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன. வான்கடே, டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தலா 20 போட்டிகள், பிராபோர்ன், எம்சிஏ ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகள் நடத்தப்படுகிறது.
பிளே ஆப் சுற்று ஆட்டங்கள், இறுதி ஆட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. லீக் சுற்று ஆட்டங்கள் மே 18ம் தேதியுடன் முடிவடைகிறது.  பைனல் மே 29ல் நடைபெறும்.

முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மோதல்
மும்பை வான்கடே அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன்  சென்னை, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா மோதுகின்றன. சென்னை அணி இதுவரை 4 முறையும், கொல்கத்தா 2 முறையும் சாம்பியன்களாகி உள்ளன. இம்முறை ஜடேஜா தலைமையில் சென்னையும், ஷ்ரேயாஸ் தலைமையில் கொல்கத்தாவும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பைனலில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   2020ல் டெல்லி கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் பைனல் வரை அணியை அழைத்துச் சென்றார். அதனால்  கொல்கத்தா அணி மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. தலைமை பொறுப்பில் இருந்து தோனி விலகி, ஜடேஜா பொறுப்பேற்றுள்ளதால் சென்னை மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

நேருக்கு நேர்
இரு அணிகளும் 26 முறை மோதியதில்  சென்னை 17-8 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. 2021ல் மோதிய 3 ஆட்டங்களிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சென்னை 220 ரன், கொல்கத்தா 202 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக சென்னை 114,  கொல்கத்தா 108 ரன்னில் சுருண்டுள்ளன.

சிஎஸ்கே ராஜ்ஜியத்தில்...
சென்னை இதுரை 12 தொடர்களில் களம் கண்டுள்ளது. அவற்றில் 11தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. அதில் 2020ம் ஆண்டு மட்டும் முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் கூட நுழைய முடியாமல் 7வது இடத்தை பிடித்தது. 9 முறை பைனலுக்குள் நுழைந்து, அதிக முறை பைனலில் விளையாடிய அணி என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளதுடன் 4 முறை கோப்பையையும் வென்று அசத்தியுள்ளது. தமிழக வீரர்கள் நாராயண் ஜெகதீசன், செழியன் ஹரிநிஷாந்த் வாய்ப்பு கிடைத்தால் அசத்தக் காத்திருக்கிறார்கள்.

நைட் ரைடர்ஸ் உற்சாகம்
புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் கொல்கத்தா அணி உற்சாகமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர். 2012, 2014ல் கோப்பையை கைப்பற்றிய கேகேஆர், கடந்த ஆண்டு 3வது முறையாக பைனலுக்கு முன்னேறி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. ஷ்ரேயாஸ், ரஸ்ஸல், சுனில், பிஞ்ச், இந்திரஜித், ராணா, வெங்கடேஷ் என்று அதிரடிக்கு பஞ்சமில்லா பேட்டிங் வரிசை எதிரணி பவுலர்களுக்கு சவாலாக இருக்கும்.

Comments

Popular posts from this blog